நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
நஞ்ராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.;
மங்கலம்,
திருப்பூர் மேற்கு ரோட்டரி நீர் மேலாண்மை அறக்கட்டளை சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் நொய்யல் உபரிநீரை மோட்டார் மூலம் பம்ப் செய்து நிலத்தடி குழாய் பதித்து செங்கரைப்பள்ளம் ஓடை வழியாக வேட்டுவபாளையம் குளம் உள்பட 16 குட்டைகள் நீர் நிரப்பப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான அடிக்கல்நாட்டு விழா வேட்டுவபாளையம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் மேற்கு ரோட்டரி நீர் மேலாண்மை அறக்கட்டளை தலைவர் கே.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வி.ரகுபதி வரவேற்றார். பொருளாளர் வி.எம்.முத்துக்குமார், கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, திருப்பூர் மேற்கு ரோட்டரி அறக்கட்டளை தலைவர் சுவாமி சி.ஈஸ்வரன், பொருளாளர் அமிர்தம் சி.ஈஸ்வரன், திருப்பூர் மேற்கு ரோட்டரி நீர் மேலாண்மை அறக்கட்டளை கவுரவ ஆலோசகர் என்.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பறவைகள் சரணாலயம்
விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது “ திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று, அந்த குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அதை தொடர்ந்து இடுவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது“ புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களி்ன் வாக்குகள் அ.தி.மு.க. கிடைக்கும்” என்றார்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக விழாவில் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஏ.கார்த்திகேயன், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.சுப்பிரமணியம், வெற்றி அமைப்பின் தலைவர் டி.ஆர்.சிவராம், முன்னாள் மேற்கு ரோட்டரி தலைவர் ஏ.கோபிநடராஜமூர்த்தி, வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏ.சுப்பிரமணி. திருப்பூர் மேற்கு ரோட்டரி செயலாளர் எல்.நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.