சேலத்தில் போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் லாரி மோதி பலி
சேலத்தில் லாரி மோதி போலீஸ் தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.;
சேலம்,
சேலம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மகன் பெரியண்ணன் (வயது 21). என்ஜினீயர். இவர் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். தமிழகம் முழுவதும் நேற்று போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. பெரியண்ணனுக்கு சேலத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுதுவதற்காக என்ஜினீயர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து மொபட்டில் சேலம்- சென்னை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மாசிநாயக்கன்பட்டி அருகே சென்ற போது அவருக்கு பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி கீழே விழுந்தார். இதில் தலை உள்பட உடலில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்ததும் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பெரியண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் நேற்று காலை அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.