சிங்காநல்லூரில் பரபரப்பு: ரெயில் என்ஜினில் சிக்கி இழுத்து வரப்பட்ட வாலிபர் உடல் - தண்டவாளத்தை கடந்த போது விபத்தா? போலீசார் விசாரணை

சிங்காநல்லூரில் ரெயில் என்ஜினில் சிக்கி இழுத்து வரப்பட்ட வாலிபர் உடலால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தை கடந்த போது விபத்தா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-13 22:15 GMT
கோவை, 

கவுகாத்தியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி நேற்று ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. கோவை சிங்காநல்லூர் அருகே இந்த ரெயில் வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டுள்ளார். அப்போது என்ஜினின் முன்புற கம்பி வாலிபரின் வாய் பகுதியில் குத்தி பின்னந்தலை வழியாக வந்துள்ளது. இதனை தொடர்ந்து என்ஜினில் சிக்கிய வாலிபரது உடல் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்து வரப்பட்டது. ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்தபோது, சிக்கி இருந்த உடலை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். அப்போது என்ஜின் பகுதியில் உடல் தொங்கிக்கொண்டு இருந்தது. உடனே இது குறித்து அவர் கோவை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டனர். அந்த வாலிபரது இடது மார்பு பகுதியில் துர்கா என்று ஆங்கிலத்திலும் இடது கையில் என் என்று ஆங்கிலத்திலும் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தற்கொலை செய்வதற்காக ரெயில் முன் பாய்ந்தபோது என்ஜினில் சிக்கினாரா? அல்லது தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் சிக்கினாரா? என்று தெரியவில்லை.இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா ஏசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் காரணமாக ½ நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்