கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வை 10,038 பேர் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மையங்களில் நேற்று 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வை 10,038 பேர் எழுதினார்கள்.

Update: 2020-12-14 03:18 GMT
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கந்திகுப்பம் பி.எஸ்.வி. பொறியியல் கல்லூரி, போலுப்பள்ளி அறிஞர் அண்ணா அறிவியல் கல்லூரி, ஓசூர் செயின்ட் ஜோசப் பள்ளி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி என 6 மையங்களில் தேர்வு நடந்தது.

10,038 பேர் எழுதினர்

இந்த தேர்வை எழுத 9,588 ஆண்கள், 1,435 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 11,025 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில், 8,798 ஆண்கள், 1,238 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 10,038 பேர் தேர்வு எழுதினார்கள். 987 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வை முன்னிட்டு அறையின் கண்காணிப்பாளர்களாக போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் பணியாற்றினார்கள். 

மேலும் செய்திகள்