தர்மபுரி மாவட்டம் முழுவதும் 28 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 22,152 பேர் எழுதினர்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 28 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 22 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
தர்மபுரி,
தமிழகம் முழுவதும் போலீஸ் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த பணிக்காக மொத்தம் 25 ஆயிரத்து 863 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 28 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையத்திற்கு வந்த அனைத்து தேர்வர்களும் பலத்த பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்துக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு நேரத்துக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை மொத்தம் 22 ஆயிரத்து 152 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 3,711 பேர் தேர்வு எழுத வரவில்லை.
டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தொப்பூர், நல்லம்பள்ளி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.