விருதுநகரில் 123 பவுன் நகை, ரூ.26 லட்சம் சிக்கிய நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; 3 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகரில் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் கார்களில் 123 பவுன் நகை மற்றும் ரூ.26 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீடுகளில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2020-12-13 23:57 GMT
கலைச்செல்வி, விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர்
சிக்கியது
விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் மதுரை வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகியோரின் கார்களில் இருந்து 123 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 லட்சத்து 66 ஆயிரத்து 680 ரொக்கம் ஆகியவற்றை நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். கலைச்செல்வியின் கை பையில் மட்டும் ரூ.3 லட்சம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர்களுடன் இருந்த இடைத்தரகர் அருள் பிரகாஷ் என்பவரிடமிருந்து ரூ.7ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரிடமும் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

3 பேர் மீது வழக்குப்பதிவு
நேற்று முன் தினம் நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது. இந்த விசாரணை கண்காணிப்பு அதிகாரி தாசில்தார் செந்தில்வேல் முன்னிலையில் நடைபெற்றது. தனது காரில் இருந்த நகைகள், தான் பயன்படுத்தி வந்த நகைகள் என்று கலைச்செல்வி கூறிய நிலையில் போலீசார் நகைகள் வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் மற்றும் இடைத்தரகர் அருள் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா கூறினார்.

வீட்டில் சோதனை
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கலைச்செல்வியின் வீடு சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே சுண்டமேட்டூர் அண்ணாநகரில் உள்ளது. சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் போலீசார் சுண்டமேட்டூர் அண்ணாநகருக்கு நேற்று காலை சென்றனர். அங்கு கலைச்செல்விக்கு சொந்தமாக 2 வீடுகள் இருப்பது தெரியவந்தது. அந்த 2 வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று அங்கிருந்த அதிகாரிகள் சிலரிடமும் கலைச்செல்வி குறித்து விசாரித்து சென்றனர். விருதுநகர் சூலக்கரையில் கலைச்செல்வி தங்கியிருந்த வீட்டிலும், மதுரையில் சண்முக ஆனந்த் தங்கியிருந்த இடத்திலும் போலீசார் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறினர். அதேபோல நாமக்கல்லில் உள்ள சண்முக ஆனந்த் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட போலீசார் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்