புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்; பா.ஜ.க. மாநில துணை தலைவர் பேட்டி
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என வேலூரில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.எஸ்.நாகேந்திரன் கூறினார்.;
நன்மை பயக்கும்
பா.ஜ.க.மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன் வேலூரில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும். அவர்கள் விளைவித்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
இந்த சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டமாகும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். இடைத் தரகர்களுக்கு எந்தவித வேலையும் இல்லை.
நன்மை பயக்கும் இந்த சட்டத்தை விவசாயிகளுக்கு எதிராக போலியான தோற்றத்தை உருவாக்கி சில அரசியல் கட்சியினர் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்த போராட்டத்தில் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆதரிக்கிறார்
புதிய வேளாண் சட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டம் இல்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு புதிய வேளாண் சட்டம் குறித்து முழுமையாக தெரியாது. ஆனால் விவசாயியான முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சட்டத்தின் மூலம் நன்மை கிடைக்கும் என்பதால் அதனை ஆதரிக்கிறார். புதியதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார். நாட்டில் யார் பட்டினியாக இருக்கிறார்கள் என்பது குறித்து அவர் தெரிவிக்க வேண்டும். சினிமா டயலாக் பேசாமல் எதார்த்தமாக பேசவேண்டும்.
பா.ஜ.க. வேல் யாத்திரையில் அதிக அளவில் பெண்கள், வாலிபர்கள் பங்கேற்றார்கள். ஆன்மிகத்தை வைத்துதான் தி.மு.க.வை தடுக்க வேண்டிய அவசியமில்லை. சீமான் போன்றவர்கள் எல்லாம் அரசியல் கட்சி நடத்தும் போது ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் எந்த தவறும் இல்லை. வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி வேலூரில் பா.ஜ.க. அணிகள் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட துணைத்தலைவர் ஜெகன்நாதன், பொதுச் செயலாளர் எஸ்.எல்.பாபு உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.