பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2020-12-13 16:16 GMT
பரமத்தி வேலூர், 

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் 4 ஊராட்சிக்குட்பட்ட 11 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் 921 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அழுத்தத்தில் குடிநீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நடந்தை ஊராட்சியில் சாலையோரம் நடப்பட்டுள்ள 180 வகையான மரக்கன்றுகளையும், ரூ.14.39 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணிகளையும், சித்தம்பூண்டி கிராமத்தில் சுமார் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ராமதேவம் ஊராட்சி செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் 216 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டும் பணி, வாவிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.10.18 லட்சம் மதிப்பீட்டில் 150 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் பணிகளையும் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், தனம், உதவி பொறியாளர் செல்வகுமார், பணி மேற்பார்வையாளர்கள் மங்கையர்கரசி, உமாதேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்