பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ் ஏட்டு வீட்டில் 18 பவுன் நகை-பணம் திருட்டு
கோவை அருகே நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து போலீஸ் ஏட்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.18 பவுன் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சரவணம்பட்டி,
கோவையை அடுத்த கோவில்பாளையம் வெங்கடேசா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது45). இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மா (40). இவர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இருவரும் காலை வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம ஆசாமிகளின் கைரேகை பதிவுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸ் ஏட்டு பத்மாவும், அவரது கணவர் ராஜேசும் தங்களது வீட்டில் நாய் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் மர்ம ஆசாமிகள் திருடுவதற்கு வந்தபோது அந்த நாய் குரைக்காமல் இருக்க அதற்கு மயக்க மருந்து கலந்த பிரியாணியை கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேபுகுந்து திருடிச்சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டு குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் நடந்துள்ளது. அதுவும் போலீசார் வீட்டிலேயே கைவரிசை காட்டியதுதான் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. சரவணம்பட்டி பகுதியில் தொடர்திருட்டு நடந்து வருவது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகிறது.