கடலூரில் கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.25 லட்சம் மோசடி டிரைவர் கைது

கடலூரில் கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-13 03:35 GMT
கடலூர், 

கடலூர் வன்னியர்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 49). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் சொந்தமாக சரக்கு வாகனம் வாங்கி ஓட்டி வருகிறேன். இந்நிலையில் கடலூர் கொமந்தான்மேடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்கிற கிருஷ்ணசெல்வம்(54) என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் என்னை சந்தித்து, சரக்கு வாகனத்தை தனக்கு மாத வாடகைக்கு வழங்கினால் மாதந்தோறும் ரூ.23 ஆயிரம் வாடகையாக தருவதாக கூறினார். இதை நம்பிய நான் ஒப்பந்தம் செய்து கொண்டு, சரக்கு வாகனத்தை வழங்கினேன். ஆனால் அவர் ஒரு மாத வாடகை மட்டும் தந்துவிட்டு, மீதமுள்ள வாடகை தரவில்லை. மேலும் வாகனத்தையும் என்னிடம் ஒப்படைக்கவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

டிரைவர் கைது

விசாரணையில் செல்வம், பழனிவேலிடம் சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டது போல் கடலூரை சேர்ந்த சரண்ராஜ், இளங்கோ, முருகன், செங்குட்டுவன், கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்து மொத்தம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் கஸ்டம்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்த டிரைவர் செல்வத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து ஓட்டிய 5 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்