கரூருக்கு 16-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கரூருக்கு 16-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-12-13 00:39 GMT
கரூர், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி கரூருக்கு வருகிறார். பின்னர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து தொழில் அதிபர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், என்னென்ன திட்ட பணிகள் முடிவுற்று உள்ளது. முதல்-அமைச்சர் வருகையையொட்டி எவ்வாறு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனைகளை வழங்கினார். இதில் கலெக்டர் மலர்விழி, அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் ஜங்சன் முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை ரூ.21 கோடியே 12 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா திட்ட பணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகளையும் நேரில் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் காதப்பாறை ஊராட்சி, வெண்ணைமலை முருகன் கோவிலை சுற்றி ரூ.3½ கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் தெருவிளக்கு, பூங்கா உள்ளிட்ட பணிகள் அமைக்கும் பணிகளையும், நெரூர் வடபாகம் ஊராட்சி சின்னக் காளிபாளையத்தில் நடைபெற்று வரும் பசுமை வீடுகள் கட்டும் பணியையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்