சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிப்பு
புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில் இளம்வாக்காளர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.;
புதுக்கோட்டை,
தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தும் பணியும் தொடங்கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அலுவலக நேரம் முடிந்த பின்பு ஒரு மணி நேரம் தங்களது விண்ணப்ப படிவங்களை வருகிற 15-ந் தேதி வரை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் கடந்த நவம்பர் மாதம் 21, 22-ந் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து 2-ம் கட்டமாக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வமுடன் வந்தனர். புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இளம்பெண்கள், வாலிபர்கள் அதிகம் பேர் வந்து விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இன்றும் நடக்கிறது
இதேபோல வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா? எனவும் பலர் பார்வையிட்டனர். ஒரு சிலர் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். வாக்காளர்களின் பட்டியலில் தங்கள் பகுதியில் உள்ளவர்களை பெயர் சேர்ப்பதில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் விண்ணப்ப படிவம் தொடர்பான உதவிகளை பொதுமக்களுக்கு செய்துகொடுத்தனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி முன்னேற்றம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வாக்காளர் பார்வையாளர் அபிரகாம் முன்னிலை வகித்தார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலை
இதேபோல் விராலிமலை தாலுகா, பொன்னமராவதி தாலுகா, வடகாடு, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடந்த சிறப்பு முகாமை அந்தந்தபகுதி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
திருமயம்
திருமயம் சட்டமன்ற தொகுதியில் நடந்த முகாமை மத்திய தேர்தல் பார்வையாளர் ஆபிரகாம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, திருமயம் தாசில்தார் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.