மக்கள் நீதிமன்றத்தில் 104 வழக்குகளுக்கு சமரச தீர்வு உரியவர்களுக்கு ரூ.2½ கோடி வழங்கப்பட்டன
புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் 104 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. இதில் ரூ.2½ கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கோர்ட்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) குருமூர்த்தி தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி உமாராணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் (பொறுப்பு) , முதன்மை சார்பு நீதிபதியுமான மகாலட்சுமி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1- மாஜிஸ்திரேட்டு அறிவு, கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ஜியாவுர்ரகுமான், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சஹானா ஆகிய நீதிபதிகள் கொண்ட 3 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
104 வழக்குகள் சமரச தீர்வு
இதில் நிலுவையில் உரிமையயில், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.
இதேபோல அறந்தாங்கி, கீரனூர், ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, இலுப்பூர் ஆகிய கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 104 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. மேலும் உரியவர்களுக்கு ரூ.2 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரம் வழங்கப்பட்டன.