பள்ளிப்பட்டு அருகே பரிதாபம்: கொசஸ்தலை ஆற்றில் குளித்த தொழிலாளி சாவு

பள்ளிப்பட்டு அருகே ஆற்றில் குளிக்கச்சென்ற கூலித்தொழிலாளி ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக செத்தார்.;

Update: 2020-12-12 22:15 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ் குப்பம் காலனியை சேர்ந்தவர் வெங்கடமுனி (வயது 33). செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் வெங்கடமுனி குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானார்.

பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொசஸ்தலை ஆற்றில் மூழ்கிய வெங்கட முனியை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் வெங்கடமுனியின் உடல் வெளியகரம் அரிசி ஆலை அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஒதுங்கியிருந்தது. இதை கண்டு உறவினர்கள் பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த கூலித்தொழிலாளி வெங்கடமுனிக்கு மல்லிகா (28) என்ற மனைவியும், திவ்யா (13), தனலட்சுமி (11) உள்பட 5 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்