ஆதம்பாக்கத்தில் திருட சென்ற வீட்டில் போதையில் விழுந்து கிடந்த கொள்ளையன்

திருட சென்ற வீட்டில் போதையில் விழுந்து கிடந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-12 22:30 GMT
ஆலந்தூர், 

கோவையைச் சேர்ந்தவர் சேகர் (வயது 58). இவருடைய மனைவி ஆனந்தி (55). சமையல்காரர். இவர், சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 23-வது தெருவில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார்.

நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த ஆனந்தி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர் அதன் அருகே விழுந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.

ஆனந்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன், அளவுக்கு அதிகமான போதையில் விழுந்து கிடப்பது தெரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை தெளிய வைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆலந்தூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த நாகராஜ் (36) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்