செந்துறை அருகே பரபரப்பு: ரூ.20 லட்சம் கேட்டு பிளஸ்-2 மாணவர் கடத்தல்
செந்துறை அருகே ரூ.20 லட்சம் கேட்டு பிளஸ்-2 மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகன் ராகவன்(வயது 17). இவர் ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் செல்போன் வாங்க ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் உஞ்சினி தபால் அலுவலகத்தில் இருந்து ராகவனுக்கு பார்சல் வந்துள்ளது என்றும், ரூ.2 ஆயிரத்து 600 கொடுத்து வாங்கி செல்லுமாறும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராகவன் தனது மோட்டார் சைக்கிளில் தபால் அலுவலகத்திற்கு வந்து பணம் கொடுத்து பார்சலை வாங்கி பிரித்து பார்த்துள்ளார். அப்போது அதில் செல்போன் சார்ஜர் மட்டுமே இருந்தது.
கடத்தல்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவன், இது பற்றி தனது தந்தை கருப்புசாமிக்கு போன் செய்து கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கருப்புசாமி உஞ்சினி தபால் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு பார்த்தபோது ராகவனை காணவில்லை.
இந்த நிலையில் ராகவனின் செல்போனில் இருந்து கருப்புசாமிக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், ‘உனது மகனை கடத்தி உள்ளோம். அவன் உயிரோடு வேண்டும் என்றால் ரூ.20 லட்சத்துடன் பெரம்பலூரில் உள்ள கல்குவாரிக்கு வரவேண்டும்’ என்று கூறி உள்ளார். பின்னர், ராகவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் குவாரியில் கிடப்பது போன்ற புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளனர்.
தேடுதல் வேட்டை
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி, இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரும், கிராம மக்களும் செந்துறை அருகே தளவாய் பகுதியில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராகவனும், அவருடைய நண்பர்களும் இணைந்து கடத்தல் நாடகம் ஆடுகிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.