பேராசிரியை தற்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த கணவர் கைது - மகளை கழுத்தை இறுக்கி கொன்றதாக வாக்குமூலம்
சென்னை தரமணியில் பேராசிரியை தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டார். தனது மகளை கழுத்தை இறுக்கி கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை தரமணி பள்ளிபட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கீதாகிருஷ்ணன் (வயது 53). கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி கல்பனா (36). தனியார் கல்லூரியில் இந்தி பேராசிரியையாக பணியாற்றினார். இவர்களுக்கு குணலிஸ்ரீ (14), மானசா (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கல்பனாவும், அவரது மூத்த மகள் குணலிஸ்ரீ ஆகிய 2 பேரும் பூட்டிய வீட்டுக்குள் அழுகியநிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். கீதாகிருஷ்ணன் தனது 3 வயது குழந்தையுடன், ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகி இருந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குழந்தையுடன் நின்ற கீதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கீதாகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கொரோனாவால் என்னுடைய தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க 2 பேரிடம் கடன் வாங்கினேன். ஆனால் கடனை அடைக்க முடியவில்லை. கடனுக்கு வட்டியும் வேகமாக ஏறியது. கடன்காரர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் எனக்கும், மனைவி கல்பனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தோம்.
அதன்படி நான் கடந்த 2-ந் தேதி பூச்சிமருந்து வாங்கி வந்தேன். முதலில் மனைவிக்கும், மூத்த மகளுக்கும் கொடுத்தேன். ஆனால் அந்த மருந்தை குடித்தும் 2 பேரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து நானும், எனது மனைவியும் சேர்ந்து துப்பட்டாவால் மகள் கழுத்தை நெரித்துக்கொன்றோம். பின்னர் எனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் 2 பேர் உயிரிழந்ததை பார்த்ததும் எனக்கு திடீரென்று உயிர்பயம் வந்துவிட்டது. இதனால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டுவிட்டு 2-வது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதி சென்று அங்கு 2 நாட்கள் தங்கியிருந்தேன். பின்னர் சென்னை வந்து எங்கு செல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசாரணைக்கு பின்னர் கீதாகிருஷ்ணன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். அவருடைய 3 வயது குழந்தையை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.