ராமநாதபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சி; மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-12 23:03 GMT
ராமநாதபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி இழப்பீடு தொகைக்கான உத்தரவு வழங்கியபோது எடுத்தபடம்.
லோக் அதலாத்
ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் சார்பில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரசதீர்வு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சப்-கோர்ட் நீதிபதி ப்ரீத்தா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெனிதா, ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தங்கராஜ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் பேசியதாவது:- சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் வழக்கினை முடித்து கொள்ள இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கூறப்படும் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. இதுபோன்ற லோக் அதாலத் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் கோர்ட்டுகளில் நிலுவையில் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சமரச தீர்வு
இந்த நிகழ்ச்சியில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுபோன்ற லோக் அதாலத் நிகழ்ச்சியை வழக்குகள் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு சமரச தீர்வு செய்து தீர்த்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள அமர்வுகளில் 591 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.5 கோடியே 52 லட்சத்து 310 மதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் வங்கிகளில் வராக்கடன் தொடர்பான 91 வழக்குகளில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 655 மற்றும் மோட்டார் வாகன விபத்து தொடர்பான 39 வழக்குகளில் ரூ.1 கோடியே 82 லட்சத்து 20 ஆயிரத்து 200 பணம் செலுத்த தீர்வாகி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலாளர் நம்புநாயகம், வக்கீல் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்