தேளூர் கிராமத்தில் சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைக்க கோரிக்கை
தேளூர் கிராமத்தில் சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த தேளூர் ஊராட்சி அண்ணா நகர் காலனித்தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் வகையில் மயான கொட்டகை உள்ளது. இந்த கொட்டகை 15 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டதாகும்.
இந்நிலையில் சில மாதங்களாக மயான கொட்டகையின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழை பெய்யும் சமயங்களில், இறந்தவர்களின் உடலை மயான கொட்டகைக்குள் எரியூட்டும்போது மழைநீர் கொட்டகைக்குள் ஒழுகுவதால், முழுவதுமாக எரியூட்ட முடியாமல் பாதி உடல் எரிந்தும், பாதி உடலை எரிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
தண்ணீர் வருவதில்லை
இந்த மயான கொட்டகை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 2019-2020-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 977 மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய அடிபம்பு அமைக்கப்பட்டது. இந்த அடிபம்பில் இருந்து தண்ணீர் பிடித்து, இறுதிச்சடங்குகள் செய்து வந்தனர். தற்போது அடிபம்பு தளம் உள்ளிட்டவை சேதமடைந்து தண்ணீர் வருவதில்லை.
இதனால் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, இறந்தவர் உடலுக்கு சடங்கு செய்யும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மயான கொட்டகையை சீரமைப்பதோடு, அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.