ஸ்ரீபெரும்புதூர் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், ஆ.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவரது மகள் சுவேதா (வயது 24). கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசன்னா (25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சுவேதாவும், பிரசன்னாவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பிரசன்னாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரசன்னா தனது காதல் மனைவி சுவேதா வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கணவர் பிரசன்னா வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, சுவேதா வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே கடைக்கு சென்று விட்டு சுவேதாவின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மகள் பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுவேதாவிற்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணை செய்து வருகிறார்.