அம்பத்தூர் அருகே, மாயமான ரவுடி குத்திக்கொலை - கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முட்புதரில் உடல் வீச்சு
அம்பத்தூர் அருகே, மாயமான ரவுடி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முட்புதரில் உடல் வீசப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
திரு.வி.க.நகர்,
சென்னை அம்பத்தூரை அடுத்த மங்களபுரம், குள்ளன் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). ரவுடியான இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சதீஷ், அதன்பிறகு மாயமாகிவிட்டார். அவரது உறவினர்கள் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதுபற்றி அவரது தாய் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சதீசை தேடி வந்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சதீஷ் தனது நண்பர்கள் சிலருடன் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ. பின்புறம் மது அருந்தியதும், அந்த இடத்தில் ரத்தகரை படிந்து இருப்பதும் தெரிந்தது. இதனால் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் சதீஷ் உடல் வீசப்பட்டு உள்ளதா? என கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில் சதீஷ் பிணமாக கிடப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் 2 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் சதீசை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, பின்னர் கை, கால்களை கட்டி உடலை முட்புதரில் வீசி இருப்பதாக தெரிகிறது. அம்பத்தூர் போலீசார் சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்தும், கொலைக் கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.