ராமேசுவரம் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு; அனுமதி மறுப்பால் வாசலில் காத்து நின்ற பக்தர்கள்

ராமேசுவரம் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வாசலில் காத்து நின்றனர்.;

Update: 2020-12-12 22:42 GMT
ராமேசுவரம் கோவிலில் சாமி வைக்கப்பட்ட மரக்கேடயத்தை கோவில் குருக்கள் சுமந்து வருவதை படத்தில் காணலாம்
ராமநாத சாமி கோவில்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை அமலில் இருந்தது. தொடர்ந்து 5 மாதத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பக்தர்கள் தேங்காய், பழம் உடைக்கவோ, பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு செல்வதற்கோ தொடர்ந்து தடையானது அமலில் இருந்து வருகின்றது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பிரதோஷ நாளன்று சாமி உலா வரும் போது சாமியுடன் பிரகாரத்தை சுற்றி வருவதற்கும், அந்த நேரத்தில் சாமியை தரிசனம் செய்வதற்கும் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது.

சனி பிரதோஷம்
இந்த நிலையில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்ய ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் கே ாவில் வாசலில் குவிந்தனர். ஆனால் மாலை 4.45 மணியிலிருந்து பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவில் வாசலில் காத்து நின்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையே சாமி சிறப்பு அலங்காரம் செய்து மரக்கேடயத்தில் வைக்கப்பட்டு மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவறையில் உள்ள ராமநாத சாமிக்கும் மற்றும் எதிரே உள்ள பெரிய நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிபிரதோஷத்தன்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வருகின்ற பிரதோஷம் முதலாவது வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்