சிவகங்கை அருகே 2 சரக்கு வாகனங்கள் மோதல்; காய்கறிகள் சாலையில் சிதறின; 2 பேர் படுகாயம்
சிவகங்கை அருகே 2 சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் இருந்த காய்கறிகள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.
சரக்கு வாகனங்கள் மோதல்
சிவகங்கையை அடுத்துள்ள கூட்டுறவுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட பப்பாளி பழங்களை விற்பதற்காக ராமநாதபுரத்திற்கு ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றார். அந்த வாகனத்தை அவரே ஓட்டி சென்றார்.
அவர் சிவகங்கை-மதுரை பைபாஸ் ரிங்ரோடு பகுதியில் சென்ற போது மதுரையில் இருந்து தொண்டி நோக்கி காய்கறி ஏற்றிகொண்டு வந்த மற்றொரு சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் ஏற்றப்பட்டு இருந்த காய்கறி, பழங்கள் சாலையில் சிதறி ஓடின.
2 பேர் படுகாயம்
பொன்னையா ஓட்டி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அதில் இருந்த 1½ டன் பப்பாளி பழங்கள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் 2 சரக்கு வாகனத்தில் வந்த 2 வாகன டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.