ஈரோடு மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாலை மறியல்; ஈ.ஆர்.ஈஸ்வரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து நடந்தது

ஈ.ஆர்.ஈஸ்வரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-12-12 20:42 GMT
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
அந்தியூர்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஏரியை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அந்தியூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் கொ.ம.தே.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 53 பேரை கைது செய்தனர்.

பவானி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பவானியில் கொ.ம.தே.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் துரைராஜா போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

சாலை மறியலில் ஈடுபட்ட பவானி நகர தலைவர் குமார், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், பிரகாசம், இளைஞரணி செயலாளர் சிவக்குமார், தலைவர் கந்தசாமி உள்பட 25 பேரை பவானி போலீசார் கைது செய்தார்கள்.

சித்தோடு
சித்தோட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மண்வெட்டியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் கோவணம் கட்டியபடி கலந்து கொண்டார். ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி சாலை மறியலுக்கு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், மாநில தொழிற்சங்க தலைவர் ஜெகநாதன், மேற்கு மாவட்ட தலைவர் மலைச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் வேலுச்சாமி, இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கவுதம், ஜெகதீஷ், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, மண்டல செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், மகளிர் அணி செயலாளர் 
ராஜாமணி உள்பட சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை சித்தோடு போலீசார் கைது செய்தார்கள்.

பெருந்துறை
பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே நேற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள், ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு சாலை மறியலுக்கு தலைமை தாங்கினார்.

போராட்டம் குறித்து தகவலறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிடக்கோரினார்கள். அதை அவர்கள் ஏற்க மறுத்ததால் சுமார் 80 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் பஸ் நிலையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு புறநகர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைவர் முத்துசாமி போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், சரவணன், சுந்தரம், நடராஜ் மற்றும் கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். மேலும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தபோது 15 நிமிடம் முதல் சுமார் 45 நிமிடம் வரை அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்