தர்மபுரி அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி பலாத்காரம் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
தர்மபுரி அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் லெனின் (வயது 20). சரக்கு வேன் டிரைவர். இவருக்கும் தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் காரணமாக அந்த மாணவியிடம் புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று லெனின் கேட்டுள்ளார்.
அந்த மாணவி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து வந்து அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தர்மபுரி அருகே உள்ள தனியார் விடுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்ற லெனின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனது தொடர்பாக மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவங்கள் அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், லெனினை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
லெனின் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து போலீசார் சோதனையிட்டனர். அவர் வேறு ஏதாவது பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளாரா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.