கடலூர் வில்வநகரில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலை உள்வாங்கியது போக்குவரத்து துண்டிப்பு
கடலூர் வில்வநகரில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலை உள்வாங்கியுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை வழியாக தேவனாம்பட்டினத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டால், அதனை சரிசெய்வதற்காக சுமார் 50 மீட்டர் இடைவெளியில் மேன்கோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேன்கோல்கள் பல இடங்களில் சேதமடைந்து கிடக்கிறது. அதனை அதிகாரிகள் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீர் அனைத்தும் சேதமடைந்த மேன்கோல் வழியாக பாதாள சாக்கடைக்குள் புகுந்தது. இதனால் பாதாள சாக்கடை குழாய் வழியாக ஒரே நேரத்தில் மழைநீரும், கழிவுநீரும் அதிகளவில் சென்றதால், பல இடங்களில் மேன்கோல் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த வகையில் கடலூர் வில்வநகரில் உள்ள பாதாள சாக்கடை குழாயின் மேன்கோல் வழியாகவும் கடந்த சில நாட்களாக கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே நேற்று இரவு வில்வநகரில் மேன்கோல் வழியாக கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருந்த இடத்தில், திடீரென பாதாள சாக்கடை குழாய் உடைந்தது. அதில் இருந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறி, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சிறிது நேரத்தில் பாதாள சாக்கடை உடைந்த இடத்தில் சாலையும் உள்வாங்கியது. இதனால் அந்த இடத்தில் சுமார் 10 அடி அகலத்துக்கும், 10 அடி ஆழத்துக்கும் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
சாலை முழுவதும் உள்வாங்கியுள்ளதால், அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை உள்வாங்கியது இரவு நேரம் என்பதால், அவ்வழியாக எவ்வித வாகனங்களும் செல்லவில்லை. இதனால் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. எனவே பாதாள சாக்கடை உடைப்பையும், உள்வாங்கிய சாலையையும் உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.