கோமுகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு
கோமுகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர்கள் தேவேந்திரன் மகன் வரதராஜ்(வயது 17), குமார் மகன் ராஜ்குமார்(16), ராமு மகன் அஸ்வந்த் (15). நண்பர்களான இவர்கள் 3 பேரும், கடந்த 4-ந்தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் அருகே கோமுகி ஆற்றின் தடுப்பணையில் ஓடிய தண்ணீரை பார்க்க சென்றனர். பின்னர் தடுப்பணை வழியாக 3 பேரும் அக்கரைக்கு செல்ல முயன்றனர். அப்போது கோமுகி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் தடுப்பணையில் அதிகளவில் வந்ததால், வரதராஜ் உள்பட 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் வரதராஜையும், ராஜ்குமாரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் வரதராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் அஸ்வந்தின் நிலை என்ன என்று தெரியவில்லை.
இதையடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அஸ்வந்த்தை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் ரப்பர் படகு மற்றும் டிரோன் கேமரா மூலம் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று 8-வது நாளாக மாணவன் அஸ்வந்தை தேடும் பணி நடைபெற்றது. இதில் மாணவன் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரமுள்ள மற்றொரு தடுப்பணை அருகே ஆற்றின் ஓரத்தில் முள் செடி, கொடிகள், கோரைகள் இருக்கும் பகுதியில் உடல் அழுகிய நிலையில் அஸ்வந்த் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஸ்வந்த் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.