முத்துப்பேட்டையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மூழ்கின: மழை விட்டும் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை
முத்துப்பேட்டையில் மழைநீரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மூழ்கின. மழைவிட்டும் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் 13 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் புயலால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீ்ர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அனைத்து நீர்நிலைகளிலும் நிரம்பியது. மேலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. தற்போது மழைவிட்டு ஒருவாரம் ஆகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் முத்துப்பேட்டையை அடுத்த குன்னலூர் ஊராட்சியில் குன்னலூர், கடம்பவிளாகம், எக்கல், பன்னைபொது ஆகிய பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கி உள்ளது. இந்த பயிர்களும் அழுகி வருகிறது. தகவல் அறிந்த முத்துப்பேட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூறுகையில்,
இப்பகுதியில் உள்ள ஆறுகள், வடிகால்கள் முறையாக தூர்வாராததால் மழைவிட்டும் தண்ணீர் வயல்களில் வடியாமல் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.