போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்: கர்நாடகத்தில் பஸ் போக்குவரத்து முடங்கியது - பொதுமக்கள் அவதி-பஸ்கள் மீது கல்வீச்சு
கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர், தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் நேற்று முன்தினம் விதான சவுதாவை நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர்.
பெங்களூரு,
போலீசாரின் தடையை மீறி போக்குவரத்து கழக ஊழியர்கள் விதான சவுதாவை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பணியை புறக்கணித்ததாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் முன்கூட்டியே எந்த தகவலையும் தெரிவிக்காமல் நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெங்களூருவில் பி.எம்.டி.சி.யின் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. பணிக்கு வந்தவர்களை வைத்து ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. வழக்கமான அளவில் பஸ்கள் இயங்காததால், காலையில் வேலைக்கு செல்வோர் பஸ்சிற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். ஆனால் பஸ்கள் வரவே இல்லை. வெளியூர்களில் இருந்து பெங்களூரு வந்தவர்கள், தாங்கள் போகவேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதனால் அவர்கள் ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் அதிகளவில் கட்டணத்தை வழங்கி தங்களின் இடங்களுக்கு சென்றனர். மேலும் சொந்த வேலைகள், மருத்துவமனைகள் என பல்வேறு பணிகளுக்காக பஸ்களை நம்பி இருந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல் மைசூரு, பெலகாவி, தார்வார், கலபுரகி, சித்ரதுர்கா, மங்களூரு உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில பஸ்கள் ஓடிய நிலையில் அவற்றின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பெங்களூருவில் மட்டும் சுமார் 10 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தவிர ராமநகர், மங்களூரு, நெலமங்களா, சித்ரதுர்கா, கோலார், கலபுரகி, துமகூரு, பங்காருப்பேட்டை, குடகு உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. இதில் அந்த பஸ்களின் கண்ணாடி நொறுங்கியது. அந்த மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூவில் உள்ள சுதந்திர பூங்காவில் போக்குவரத்து ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். தங்களின் சட்டையை கழற்றிவிட்டு, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள் பஸ்களின் வருகை இன்றி வெறிச்சோடி இருந்தது. ஒரு சில பஸ்கள் மட்டும் அங்கு வந்து சென்றன. இதனால் பயணிகள், பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தனர். அவர்கள் தங்களின் பகுதிக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாயினர்.
போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை முடங்கியது. இதையடுத்து பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறையை நிர்வகித்து வரும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பெங்களூருவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் அனந்த சுப்பாராவ் மற்றும் சி.ஐ.டி.யூ. உள்பட 4 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும், கொரோனா தாக்கி இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும், பணி ஒதுக்குவதில் அதிகாரிகள் தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கூறினர்.
இதுகுறித்து நான் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து இன்று (நேற்று) மாலை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். போக்குவரத்து ஊழியர்கள் ஒரு குடும்பத்தை போல் உள்ளனர். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதை பேசி தீர்த்துக் கொள்வோம். ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேட்டி அளித்த அனந்த சுப்பாராவ் கூறியதாவது:-
எங்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் யாரும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. வேறு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை நியாயமானது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆனால் திடீரென வேலை நிறுத்தம் நடைபெறுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அழைத்து பேசுமாறு துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியிடம் கூறியுள்ளோம். அவர்களிடம் பேசினால் தான் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். கடந்த காலங்களிலும் வேலை நிறுத்தம் நடத்தியுள்ளோம். வரும் காலத்திலும் வேலை நிறுத்தும் நடத்த வேண்டிய நிலை வரும். அரசு எங்கும் ஓடிப்போக முடியாது. அதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் இந்த அம்சத்தை யோசித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அனந்த சுப்பாராவ் கூறினார்.