அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த உணவு விடுதி கூடம்; முன்னாள் மாணவர்கள் கட்டி கொடுத்தனர்

காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் 1980-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில் மாடர்ன் கிச்சனுடன் கூடிய ரூ.3½ கோடியில் ஒருங்கிணைந்த உணவு விடுதியை கட்டிக் கொடுத்துள்ளனர்.;

Update: 2020-12-11 23:27 GMT
முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த உணவு விடுதி கூட திறப்புவிழா
ஒருங்கிணைந்த உணவு விடுதி
காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் 1980-ம் ஆண்டு படித்த மாணவர்கள் கடந்த 2018-ம் நடந்த முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழுவின் போது தாங்கள் படித்த கல்லூரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினர். அதன்படி மாணவர்கள் நல்ல சூழலில் உணவருந்தும்போது தங்கள் கல்வியை மேம்படுத்துவார்கள். அதற்காக ஒரு ஒருங்கிணைந்த உணவு விடுதியை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற முடிவெடுத்தனர்.

அவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட அசெட் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அனுமதியுடன் பணிகளை தொடங்கினர். இந்த டிரஸ்டின் நிர்வாக தலைவர் எஸ்.ஆர்.சபாபதி, மேனேஜிங் டிரஸ்டி ஆர்.சம்பத், செயலாளர் எஸ்.அப்பாவு, பொருளாளர் கே.பிரபு, டிரஸ்டிகள் சி.பாலசுப்பிரமணியன், பாரதி ராதா, இஸ்மாயில் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ரூ.3½ கோடியில் இந்த ஒருங்கிணைந்த உணவு விடுதியை கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த உணவு விடுதியின் கணபதி ஹோம பூஜை கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி முன்னிலையில் நடந்தது. பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசிடம் ஒப்படைக்கப்படும்
இது குறித்து முன்னாள் மாணவர்கள் சார்பில் கூறியதாவது:-

இந்த கல்லூரியில் படித்த நாங்கள் இந்த கல்லூரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் இப்பணிகளை மேற்கொண்டுள்ளோம். 98 முன்னாள் மாணவர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். ரூ.2½ கோடியில் ஆரம்பித்த பணிகள் தற்போது 3½ கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளது.

மேலும் 27 ஆயிரத்து 500 சதுர அடியில் 2 தளங்களுடன் இந்த உணவு விடுதி அமைந்துள்ளது. ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடலாம். அதற்கேற்ப கிச்சனும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் தளத்தில் 600 பேர் அமரலாம். நீராவி மூலம் சாதம் சமைக்கும் கொள்கலன்கள், ஒரு மணி நேரத்தில் ஆயிரம் சப்பாத்தி தயாரிக்கும் ஆட்டோமெட்டிக் சப்பாத்தி எந்திரம், ஒரு மணி நேரத்தில் 400 

தோசை தயாரிக்கும் ஆட்டோமெட்டிக் தோசா எந்திரம், 10 நிமிடத்தில் 800 இட்லி தயாரிக்கும் ஓவன், மாணவர்கள் சாப்பிடும் தட்டு நீராவியில் கழுவுவதற்கான எந்திரம், காய்கறி நறுக்கும் எந்திரம், உருளை உரிக்க, தேங்காய் துருவ என அனைத்து வகையான எந்திரங்களும் உள்ளது.

நீருற்றுடன் கூடிய பூங்கா, சுகாதாரமான முறையிலான சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டிடம் உரிய முறையில் அரசுக்கு ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்