5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டுகள் ஆய்வு? தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-12-11 23:02 GMT
மதுரை ஐகோர்ட்
நினைவு சின்னங்கள்
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ் என்பவரும், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக்கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏற்கனவே 50 நினைவுச்சின்னங்களுக்கு பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 நினைவுச்சின்னங்கள் பராமரிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு 5.11.2020-ல் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு வருகிற 17-ந்தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் குறித்து பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அடுத்த விசாரணைக்குள் பெயர் பலகை அமைக்க வேண்டும்.

மத அடையாளங்களை நிறுவக்கூடாது
மதுரை யானைமலையில் சமணர் படுகைக்கு செல்லும் வழியில் சிமெண்டில் செய்யப்பட்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்கால நினைவுச்சின்னத்தின் அடையாளத்தை மாற்றும் வகையில் அங்கு எவ்வித மத அடையாளங்களையும் நிறுவக்கூடாது. இதனால் யானைமலையில் உள்ள சிமெண்ட்டு சிவலிங்கத்தை அகற்ற வேண்டும். தவறினால் மதுரை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் படிப்புகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளார்களா? ஆசிரியர்கள் காலிப்பணியிடம் தொடர்பாக அந்த 2 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எத்தனை கல்வெட்டுகள்
மனுதாரர் வக்கீல் ஆர்.அழகுமணி, ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம் மற்றும் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மாதிரியை தாக்கல் செய்துள்ளார். அவற்றை அமெரிக்கா புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு வயதை கண்டறியும் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல்துறை அனுமதி கேட்டுள்ளது. இதன் மீதான முடிவை மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்