வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைவு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகமான காரணத்தால் காய்கறிகள் விலை குறைந்து உள்ளது.
சென்னை,
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஓரிரு வாரத்துக்கு முன்பு வந்த ‘நிவர்’ புயல் மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக பெய்த கனமழையால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவானது. இதனால் காய்கறி விலை 2, 3 மடங்கு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மழை குறைந்து உள்ள காரணத்தால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், காய்கறிகள் விலை பெருமளவு குறைந்துள்ளது.
அதன்படி, காய்கறிகளின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு (அடைப்புக்குறிக்குள் நேற்று முன்தின விலை குறிப்பிடப்பட்டுள்ளது):-
கத்தரிக்காய் - ரூ.35 (ரூ.70), வெள்ளரிக்காய் - ரூ.10 (ரூ.20), கேரட் - ரூ.60 (ரூ.100), பீட்ரூட் - ரூ.35 (ரூ.45), பீன்ஸ் - ரூ.30 (ரூ.65), தக்காளி - ரூ.20 (ரூ.35) பச்சை மிளகாய் - ரூ.24 (ரூ.40), கோவக்காய் - ரூ.25 (ரூ.35), இஞ்சி ரூ.35 (ரூ.40), முட்டை கோஸ் - ரூ.20 (ரூ.30), சேனை கிழங்கு - ரூ.15 (ரூ.20), சேப்பங் கிழங்கு - ரூ.30 (ரூ.40), மாங்காய் - ரூ.50 (ரூ.80), நெல்லிக்காய் - ரூ.40 (ரூ.80), முருங்கைக்காய் - ரூ.50 (ரூ.70), வெங்காயம் - ரூ.40 (ரூ.60), சாம்பார் வெங்காயம் - ரூ.80 (ரூ.110).
வெண்டைக்காய், வாழைக்காய் ஆகிய இரண்டும் விலை சற்று ஏறி உள்ளது. அதாவது நேற்று முன்தினம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் நேற்று ரூ.30-க்கும், நேற்று முன்தினம் ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எண்ணம் வாழைக்காய் நேற்று ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டது.