ரூ.119 கோடி செலவில் கட்டப்படுகிறது: தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
தென்காசியில் ரூ.119 கோடி செலவில் கட்டப்பட உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் உதயமானது. கடந்த 22-11-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் பின்பகுதியில் 11.11 ஏக்கர் (28 ஆயிரத்து 995 சதுர மீட்டர்) பரப்பளவில் ரூ.119 கோடி மதிப்பீட்டில், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்படவுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அவருடன் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திரரெட்டி ஆகியோர் இருந்தனர்.
இப்புதிய வளாகத்தில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், எல்காட் அலுவலகம், கூட்ட அரங்கு, நில அளவை உதவி இயக்குனர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம்,
வேளாண்மைத் துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை போன்ற துறைகளின் அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.
அதேநேரத்தில் தென்காசி ரெயில் நகரில் உள்ள அரசு கட்டிடத்தில் இதற்கான விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சமீரன், எம்.எல்.ஏ.க்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், பொதுமக்கள் சார்பில் சங்கரநாராயணன் ஆகியோர் மேடையில் நின்றனர். முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டியதும், அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
தென்காசி மாவட்ட மக்களின் நெடுங்கால கனவாக இருந்த தென்காசி மாவட்டத்தை உருவாக்கி 22-11-2019 அன்று தங்களது பொற்கரங்களால் தொடங்கி வைத்த முதல்-அமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தென்காசி மாவட்டத்திற்கு ரூ.119 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 11.11 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 6 மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது என்பதை தென்காசி மாவட்ட மக்கள் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பிறகு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முகசுந்தரம், மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், சென்னை தாய்கோ வங்கி மாநில துணைத் தலைவருமான குற்றாலம் என்.சேகர், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் காத்தவராயன், அரசு வக்கீல்கள் கார்த்திக் குமார், ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் சுடலை, கணேஷ் தாமோதரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.