செங்கம் அருகே, தடுப்பணை கட்டியதால், ஏரிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து சாலைமறியல்; தீக்குளிக்க முயன்றவரை தடுத்து காப்பாற்றிய பெண் போலீஸ்
செங்கம் அருகே தடுப்பணை கட்டியதால் ஏரிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதை பெண் போலீஸ் துணிச்சலாக தடுத்தார்.
சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பெரியேரி காட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பலத்த மழை பெய்தும் உண்ணாமுலைபாளையம் மற்றும் கீழ்சிராம்பாளையம் பகுதி ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதைதொடர்ந்து தடுப்பணையில் இருந்து 2 கிராமத்திற்கும் தண்ணீர் எடுத்துச்செல்ல கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் கீழ்சிராம்பாளையம் பகுதிக்கு தண்ணீர் செல்ல கிராம மக்கள் வழிவகை செய்துள்ளனர். அதே நேரத்தில் உண்ணாமுலைபாளையம் கிராமத்தினர் தங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வராததால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பவில்லை எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது உண்ணாமுலைபாளையம் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சிவகாமி என்பவர், தற்கொலைக்கு முயன்ற நபரை தடுத்து காப்பாற்றினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டதாக இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கூறினர்.