வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் போட்டி? அண்ணன் சத்தியநாராயணா பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது குறித்து அவரது அண்ணன் சத்திய நாராயணா பேட்டி அளித்துள்ளார்.

Update: 2020-12-11 14:18 GMT
திருவண்ணாமலை,

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், புதிதாக கட்சி தொடங்க உள்ளதால் அதில் வெற்றி பெற வேண்டியும் மற்றும் உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா, அவரது மகன் ராமகிருஷ்ணன் மற்றும் மருமகள் கீதாபாய் ஆகியோர் மிருத்யுஞ்சய யாகம் நடத்தி வழிபட்டனர்.

பின்னர் சத்திய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். அதைத் தொடர்ந்து இந்த கோவிலில் (அருணகிரிநாதர் கோவில்) சிவாச்சாரியார்கள் முன்னிலையில், நாட்டு மக்களும், எல்லா குடும்பங்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டி?

வருகிற 31-ந்தேதி கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார். விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு பதில் அளிப்பார். கட்சி தொடர்பாக எல்லா தகவலும் அவர் சொல்லுவார். அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வாதம் செய்வது தான் என்னுடைய வேலை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்து கொள்ளலாம். அவரும் நல்லா இருக்கனும், நீங்களும் நல்லா இருக்கனும். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்.

திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள், ரொம்ப நாள் இருக்க மாட்டார்கள். எல்லா மதத்தினரும் ஒன்று தான். எல்லா மக்களும் ஒன்று தான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். பகவான் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருவண்ணாமலை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்