ஜோலார்பேட்டை அருகே 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே 3 வீடுகளில் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஹயாத்நகரை சேர்ந்தவர் மரகதம் (வயது 69), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவரின் கணவர் சின்னப்பு, ஓய்வுபெற்ற தலைமை காவலர். வீட்டில் மரகதமும், இளைய மகளும் வசித்து வருகின்றனர். மரகதம் தனது மருத்துவச் சிகிச்சைக்காக நகையை அடகு வைத்து, ரூ.1 லட்சத்தை பீரோவில் வைத்திருந்தார்.
சொந்த ஊரான திருப்பத்தூரை அடுத்த தண்ணீர்பந்தல் கிராமத்துக்கு நேற்று முன்தினம் காலை தாயும், மகளும் சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம், 5 பவுன் நகையை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.
அதேபோல் பொன்னேரி அருகில் உள்ள மண்டலவாடி ஊராட்சி மூர்த்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (41), ஆட்டோ டிரைவர். இவர், தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆட்டோ ஓட்ட சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, ரூ.1500, இரு சக்கர வாகனத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும் பெரியமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சங்கரின் மனைவி வெண்ணிலா (55) நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆடு மேய்க்கச் சென்று விட்டு, மாலை வீடு திரும்பினார். அந்த வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ரூ.10 ஆயிரம், 7 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து நேற்று மரகதம், ஆறுமுகம், வெண்ணிலா ஆகியோர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர். ஜோலார்பேட்டை பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடப்பதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.