கட்டாய திருமணம் செய்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

மாணவியை கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-11 05:52 GMT
வெள்ளகோவில்,

மூலனூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளியின் 17 வயது மகள் கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணத்தால் கல்லூரிக்கு செல்லாமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 7-ந் தேதி கல்லூரி செல்வதற்காக பஸ்சில் கரூர் சென்றார். இதையடுத்து மதியம் 12 மணிக்கு மாணவியின் தந்தை மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த மாணவி, கல்லூரியில் இருந்து புறப்பட்டு விட்டதாக கூறினார். பின்னர் மதியம் 1 மணிக்கு மீண்டும் அவருடைய தந்தை, மாணவியின் செல்போனை தொடர்பு கொள்ள முயன்ற போது, மாணவியின் செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகி உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, மாணவியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் அந்த மாணவி மூலனூர் பகுதியில் இருப்பதாக அவருடைய தந்தைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற மாணவியின் தந்தை, மாணவியை அழைத்துக்கொண்டு வெள்ளகோவில் போலீஸ் நிலையம் வந்தார். அங்கு அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை, ஒசபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் ரமேஷ்குமார் (22) என்பவர் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று, கரூர் பஸ்நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்ததும், பின்னர் அந்த மாணவியை பழனி அருகே வெள்ளகவுண்டன்வலசில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

மேலும் போலீசார் தேடுவதை அறிந்த ரமேஷ்குமார், அந்த மாணவியை மூலனூர் பகுதியில் கொண்டு வந்து விட்டு விட்டு தலைமறைவானதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் ரமேஷ்குமாரை தேடிவந்தனர். அப்போது ரமேஷ்குமார் மூலனூர் பஸ்நிலையத்தில் நிற்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ரமேஷ் குமாரை கைது செய்தனர். மாணவியை அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததாக ரமேஷ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்