விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.2½ லட்சம் பறிமுதல்

விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-12-11 03:21 GMT
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதியப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.

அதன் அடிப்படையில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5 மணிக்கு விருத்தாசலம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அதிரடியாக வந்ததோடு, அலுவலக ஜன்னல்கள், கதவுகளை உள்பக்கமாக பூட்டினர். அதன்பிறகு அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.2½ லட்சம் பறிமுதல்

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் கணேசன் மற்றும் அலுவலக ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள், பத்திரப்பதிவுக்காக வந்தவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியதோடு, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்