உயர் கல்வியில் முதன்மை மாநிலம் தமிழகம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

உயர் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.;

Update: 2020-12-11 02:51 GMT
அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ரூ.7.5 கோடி செலவில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் இடைநிலை ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் வரவேற்றார். சேலம் தொழிலதிபர் பாலசுப்பிரமணியன், ஈரோடு தொழிலதிபர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அண்ணாமலை பல்கலைக் கழக இணைவேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி அதற்கான கல்வெட்டையும், மாதிரி கட்டிடத்தையும் திறந்து வைத்து பேசினார்.

முதன்மை மாநிலம்

அப்போது அவர் பேசுகையில், உலகத்தர வரிசை பல்கலைக்கழகங்களில் இருக்கவேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் இடம் பெற தகுதி வாய்ந்தது. உயர் கல்வியில் தமிழகம் முன்னோடியாக விளங்கி வருகிறது. உயர் கல்வி பயில்வதில் 28.3 சதவீதத்தில் இருந்து தற்போது 49 சதவீதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்றார்.

இதையடுத்து பொறியியல் புலத்தின் பிரதான கட்டிடத்தை தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும், மேம்படுத்தப்பட்ட நூலகம் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனும் திறந்து வைத்தனர்.

நினைவு மலர்

தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 90-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நினைவு மலரை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட, அதனை அமைச்சர் எம்.சி. சம்பத் பெற்றுக்கொண்டார்.

விழாவில் சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், பதிவாளர் (பொறுப்பு) ஞானதேவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன் மற்றும் புல முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் அதன் பிரதிநிதிகள் ஷாஜகான், சையத், கோபி, மகேந்திரகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். ஏற்பாடுகளை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் பேராசிரியர் சரவணன் செய்திருந்தார்.

நிவாரணம்

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.பி. அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் இரு முறை ஏற்பட்ட புயல், மழை காரணமாக வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 96 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 11 ஆயிரத்து 84 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் என மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 181 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்காக வருவாய் மற்றும் வேளாண் துறையினர் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்டா பகுதி முழுவதும் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தினாலும் திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்