சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கிடம் அமலாக்கத்துறை விசாரணை

சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.;

Update: 2020-12-10 22:30 GMT
மும்பை,

தானேயை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா ரணாவத்தை எங்கள் துணிச்சலான பெண்கள் அறையாமல் விடமாட்டார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்தநிலையில் பிரதாப் சர்நாயக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் வந்ததாக கூறி சமீபத்தில் எம்.எல்.ஏ.வின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக எம்.எல்.ஏ.வின் மகனிடம் விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானவரான அமித் சந்தோலேயை கைது செய்தனர். பிரதாப் சர்நாயக் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவசேனா குற்றம் சாட்டி இருந்தது.

இந்தநிலையில் நேற்று இதுதொடர்பாக தென்மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ. விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு வெளியே வந்த அவர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன், என்றார்.

மேலும் செய்திகள்