தானேயில், கள்ளநோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

தானேயில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.85 லட்சத்து 48 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-12-10 22:45 GMT
தானே,

தானே காப்பூர்பாவடி சர்க்கிள் அருகே கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விட கும்பல் வரவுள்ளதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒருவர் கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக நடமாடியதை கண்டனர்.

உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சிப்லுனை சேர்ந்த சச்சின் அகரே (வயது29) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை போட்டனர்.

இதில் கத்தை, கத்தையாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தது. போலீசார் நடத்திய சோதனையில் அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் எனவும், போலியாக தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் படி சிப்லுனை சேர்ந்த மன்சூர் ஹசேன் கான்(45), மும்பையை சேர்ந்த சந்திரகாந்த் மானே(45) ஆகிய மேலும் 2 பேர் சிக்கினர்.

இவர்கள் வைத்திருந்த ரூ.85 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டுகளை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மன்சூர்கான் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். சந்திரகாந்த் மானே கோலாப்பூரில் பாத்திர கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் வங்கியில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வங்கியில் கடன் தவணை செலுத்த வேண்டி இருந்ததால் மன்சூர்கான், சச்சின் அகரேவின் உதவியுடன் கள்ளநோட்டுகள் அச்சிட்டு அதனை புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது.

மேலும் செய்திகள்