புதுவையில் போலீசார் அதிரடி வேட்டை: போதை மருந்து கும்பலுடன் ஜிப்மர் டாக்டர் கைது

புதுச்சேரி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கஞ்சா, போதை மருந்து கும்பலுடன் ஜிப்மர் டாக்டர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.;

Update:2020-12-11 05:46 IST
புதுச்சேரி,

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் கடந்த 5-ந் தேதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முதலியார்பேட்டை நூறடி சாலையில் ஸ்ரீனிவாஸ் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விடுதி மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அதே விடுதியின் மற்றொரு அறையில் புதுவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன், பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கஞ்சா மற்றும் போதை ஊசி செலுத்தி மயங்கிய நிலையில் கிடந்தார். போதை தெளிந்ததும் விசாரித்ததில் அந்த பெண் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைபார்த்து வருபவர் என்பதும் போதை மருந்துக்கு அடிமையாகி அதைத் தேடி இங்கு வந்ததும் தெரியவந்தது. போதை மருந்து வாங்கிக் கொடுத்த வாலிபரும் அவரது அறையில் இருந்தபோது போலீசில் சிக்கினார்.

கஞ்சா கும்பல் சிக்கியது

இதையடுத்து கஞ்சா, போதை ஊசி ஆகியவை அவர்களுக்கு கிடைத்தது எப்படி? சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

தங்கும் விடுதியில் கஞ்சா, போதை ஊசி ஆகியவற்றுடன் சிக்கியவர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கு கஞ்சா, போதை மருந்து ஆகியவற்றை ஆரோவில்லில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் ரஷிய நாட்டை சேர்ந்த இவான் (வயது 23) என்பவர் கொடுத்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் லாஸ்பேட்டை பெலிக்ஸ் (32) என்பவர் கஞ்சா மற்றும் போதை மருந்து சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இவான், பெலிக்ஸ் அவரது கூட்டாளிகளான வில்லியனூர் பார்த்தசாரதி (23), மணிகண்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 2 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

ஜிப்மர் டாக்டர்

சாதாரணமான இவர்களுக்கு போதை ஊசி மருந்து கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரித்தபோது, இதில் டாக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. அதாவது, கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் துரையரசன் (29) என்பவர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 3 போதை மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதலானது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா, போதை மருந்து சப்ளை செய்ததில் மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களை குறிவைத்து கஞ்சா, போதை மருந்து விற்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பாராட்டு

கஞ்சா, போதை மருந்து சப்ளை கும்பலை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், குற்றப்பிரிவு போலீசார் அம்பேத்கர், கந்தவேலு, சிரஞ்சீவி, துளசி, ராஜ்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து தெற்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்