புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கவர்னர் மாளிகையை நோக்கி விவசாயிகள் ஊர்வலம் - போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் நடத்தினர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2020-12-10 22:30 GMT
பெங்களூரு,

மத்திய அரசு, 3 புதிய வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதரவு விலை வழங்கும் நடைமுறை கைவிடப்படும் என்று விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக பஞ்சாப், அரியானா விவசாயிகள் கடந்த 15 நாட்களாக டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய மந்திரிகள் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் கடந்த 8-ந் தேதி முழு அடைப்பை விவசாயிகள் நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெங்களூருவில் விதான சவுதாவை நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு சார்பில் அதன் நிர்வாகிகள் குருபூர் சாந்தக்குமார், படகலபுரா நாகேந்திரா ஆகியோரது தலைமையில் விவசாயிகள் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் பெங்களூருவில் நடத்தினர்.

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கவர்னர் மாளிகையை நோக்கி சென்றது. சுதந்திர பூங்கா அருகே போலீசார் இருப்பு தடுப்புகளை சாலையின் குறுக்கே வைத்து ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அதையும் மீறி விவசாயிகள் கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் உண்டாகி பரபரப்பு நிலவியது. இதுகுறித்து விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு நிர்வாகி குருபூர் சாந்தக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே போல் கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாயிகளுக்கு அநீதி இழைத்துள்ளது. இந்த கருப்பு சட்டங்களை மத்திய-மாநில அரசுகள் வாபஸ் பெற வேண்டும். மாநில அரசின் திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினால், நாங்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

ஜனதா தளம்(எஸ்), காலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, மாலையில் நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்த கட்சி பா.ஜனதாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை வாபஸ் பெறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

இவ்வாறு குருபூர் சாந்தக்குமார் கூறினார்.

அதன் பிறகு விவசாயிகள் சுதந்திர பூங்காவில் ஒன்று சேர்ந்தனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா தலைமையில் விதான சவுதாவில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு நடைபயணமாக வந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். கர்நாடக அரசு நில சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களை யார் வேண்டுமானாலும் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. இதன்காரணமாக விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தேவேகவுடா மற்றும் அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா ஆகியோர் விவசாயிகளுக்கு எதிரான நில சீர்திருத்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டனர்.

பசுவதை தடை சட்டத்தை இந்த அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தெரியாமல் இதை கொண்டு வந்து ஒப்புதல் பெற்றுள்ளனர். இதை கண்டித்து நாங்கள் இன்று (நேற்று) சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு இங்கு வந்துள்ளோம். இந்த சட்டத்தால் கிராமப்புற விவசாயிகள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வயதான மாடுகளை வைத்துக் கொண்டு விவசாயிகள் என்ன செய்ய முடியும்?. அதை கோசாலைகளில் விட்டால் அதற்கு நீங்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

அதன் பிறகு அவர் விவசாயிகளுடன் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு 10 விவசாயிகளை, போலீசார் தங்களின் ஜீப்பில் கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்றனர். அங்கு கவர்னரை சந்தித்து மனு வழங்க போலீசார் ஏற்பாடு செய்தனர். அந்த விவசாயிகள் கவர்னர் மாளிகை முன் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் 10 பேர் கவர்னர் மாளிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர். விவசாயிகளின் ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்