ஆட்சிக்கு என்னால் ஆபத்து வராது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக தயங்க மாட்டேன் ஜான்குமார் எம்.எல்.ஏ. உறுதி

நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு என்னால் ஆபத்து வராது. தேர்தலின்போது மரியாதை தராவிட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக தயங்கமாட்டேன் என்று ஜான்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2020-12-11 00:14 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் ஜான்குமார். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாததால் அவர் போட்டியிடுவதற்கு வசதியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு நாராயணசாமி எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையொட்டி அவர் ஏற்கனவே வகித்த காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து இருந்ததால் அந்த இடம் காலியாக இருந்தது. இதன்பின் அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜான்குமார் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.

பா.ஜ.க. தலைவருடன் சந்திப்பு

சமீப காலமாக கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் தனித்து இருந்து வந்தார். அதேநேரத்தில் அவர் வேறு கட்சியில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்தநிலையில் புதுச்சேரி சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி அதற்கான பணிகளில் பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது.

இதையொட்டி முக்கிய புள்ளிகளை வளைத்துப் போடும் முயற்சியாக காய் நகர்த்திக் கொண்டு இருக்கிறது. இதற்கு அச்சாரம் போடும் வகையில் கடந்த 7-ந்தேதி புதுச்சேரி- திண்டிவனம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இடத்தில் பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை ஜான்குமார் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். இதுபற்றிய தகவல் புகைப் படத்துடன் சமூக வலைதளத்தில் பரவி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில கட்சி தலைமையிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

விலக தயங்கமாட்டேன்

பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரை சந்தித்தது தொடர்பாக ஜான்குமார் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஒரு தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதை பெரிய பிரச்சினை ஆக்கி விட்டனர். எனது தொகுதி மக்கள் அவர்களுக்கு பணி செய்வதற்காக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அதை நான் சரியாக செய்வேன். அதில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை.

என்னால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் வராது. அதேநேரத்தில் தேர்தலின்போது எனக்கு உரிய மரியாதை வழங்கப்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும் தயங்கமாட்டேன். இதைத்தவிர இப்போதைக்கு வேறு எதையும் சொல்ல நான் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்