நாளை முதல் 31-ந் தேதி வரை மேலும் 1 1 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் கட்சித் தலைமை அறிவிப்பு
நாளை முதல் 31-ந்தேதி வரை மேலும் 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெற இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில், சிறப்பு பொதுக்கூட்டங்களை தி.மு.க. மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது. தற்போது, கொரோனா தொற்று இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி வழியாக இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டங்கள், இதுவரை ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்துள்ளது.
தற்போது, 3-வது கட்டமாக ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், திருவள்ளூர், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் 12-ந்தேதி (நாளை) முதல் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலிக்காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்’ என்னும் தலைப்பிலான 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, 3-வது கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
அதன்படி, டிசம்பர் 12-ந் தேதி (சனி) ராமநாதபுரம், 14-ந்தேதி (திங்கள்) திண்டுக்கல், 17-ந்தேதி (வியாழன்) கடலூர், 19-ந்தேதி (சனி) திருவள்ளூர், 23-ந்தேதி (புதன்) சிவகங்கை, 26-ந்தேதி (சனி) தஞ்சாவூர், 28-ந்தேதி (திங்கள்) நாகப்பட்டினம் - திருவாரூர், 29-ந்தேதி (செவ்வாய்) திருவண்ணாமலை, 31-ந்தேதி (வியாழன்) அரியலூர் - பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.