காரைக்காலில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

காரைக்காலில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-11 00:02 GMT
காரைக்கால்,

மத்திய, மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திருச்சியைச் சேர்ந்த ஆர்.எஸ் கல்வி அறக் கட்டளை சார்பில் காரைக் கால் பஸ் நிலைய மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் கமலக் கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், துணை கலெக்டர் ஆதர்ஷ், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி தயாளன், ஆர்.எஸ்.கல்வி அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 400 பேருக்கு தையல், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு தேவையான தேநீர், உணவு மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்படும்.

சுயதொழில் பயிற்சி

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும், கிராமப்புற மக்கள் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக தையல், கணினி, சுயஉதவிக் குழுக்கள் மூலம் வாகனங்கள் வாங்கி சுயதொழில் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையினால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவிடம், அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுமார் 300 கி.மீ சாலைகள் பாதிப்பு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் சுமார் ரூ.2,800 ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்து புயல், மழையால் சுமார் ரூ.400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக இடைக்கால நிதியாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

விழா முடிந்து அனைவரும் சென்ற பிறகு பா.ஜ.க. மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் கட்சியினர் அங்கு வந்தனர். மத்திய அரசு விழாவில், பிரதமரின் புகைப்படமோ, பெயரோ பயன்படுத்தப்படவில்லை என்று கூறி மாநில அரசை கண்டித்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு விழாக்களில் பிரதமரின் படத்தை திட்டமிட்டு மாநில அரசு புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது என கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே விழா நடந்த இடத்திற்குள் நுழைந்த சிலர் பிரதமரின் புகைப்படத்தை கையில் கொண்டு சென்று ஆணி அடித்து மாட்டிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்