உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் “எனது மகளின் சாவுக்கு அவளது கணவர்தான் காரணம்” - நடிகை சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

எனது மகளின் சாவுக்கு அவளது கணவர் தான் காரணம். அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தற்கொலை செய்துகொண்ட டி.வி. நடிகை சித்ராவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Update: 2020-12-10 22:45 GMT
சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த பிரபல டி.வி. நடிகை சித்ரா, கடந்த 8-ந்தேதி இரவு, படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்றுமுன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று டாக்டர்கள் சிவக்குமார், சதீஷ் முன்னிலையில், சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை 2 மணி நேரம் நடந்தது. இது வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மதியம் 1 மணிக்கு சித்ராவின் சகோதரரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்சு மூலம் சித்ரா உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, சித்ராவின் உடலுக்கு சின்னத்திரை நடிகர்-நடிகைகள், அவர் நடித்து வந்த டெலிவிஷன் தொடரில் பணியாற்றும் சக கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் சித்ராவின் தாய் விஜயா கோட்டூர்புரத்தில் நேற்று கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகளுக்கு பதிவு திருமணம் நடந்து விட்டது. இதனால் வாரத்தில் பாதி நாட்கள் அவளது கணவர் ஹேம்நாத் வீட்டில் அவளை தங்க சம்மதித்தேன். அதன்படி 3 நாட்கள் எனது வீட்டிலும், மீதி நாட்கள் கணவர் வீட்டிலும் என் மகள் வாழ்ந்து வந்தாள். கடந்த 2-ந்தேதி எங்கள் வீட்டில் இருந்து சித்ரா, அவளது கணவர் வீட்டுக்கு சென்றாள்.

கடந்த திங்கட்கிழமை கூட நான் எனது மகளை பார்த்துவிட்டு, திருமண ஏற்பாடு குறித்து பேசிவிட்டு தான் வந்தேன். எனது மகளின் கணவரும் எங்களிடம் நன்றாகத்தான் பேசினார். எங்களிடம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டார். ஆனாலும் சித்ராவின் சாவுக்கு அவளது கணவன் தான் காரணமாக இருக்கவேண்டும். அவர் எனது மகளை ஏதோ செய்து விட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு கூட எனது மகளை போனில் தொடர்பு கொண்டு பேசினேன். “அம்மா, நான் வீட்டிற்கு செல்ல நேரம் ஆகும்” என்று கூறினாள். பின்பு, “வீடியோ கால்” செய்தும் என்னிடம் பேசினாள்.

நான் உடல்நிலை சரியில்லாதவள். அதனால், இரவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை போட்டு தூங்கி விட்டேன். காலையில் 5.15 மணிக்கு அவளது மாமனார் போன் செய்து, “சித்ரா நம்மை மோசம் செய்து விட்டு போயிட்டாள்” என்று கூறினார். இதைக்கேட்டு, நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அழுதேன். எனது பிள்ளையை போன் செய்து வரவழைத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றேன். எனது மகளை அவளது கணவர் தான் சாகடித்து விட்டார். என் பொண்ணுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது மகள் தற்கொலை செய்து கொள்பவள் அல்ல. அடுத்தவர்கள், தற்கொலை செய்து கொண்டால், இது போல் யாரும் முடிவு எடுக்க கூடாது என அறிவுரை கூறுவாள். எனது மகள் சாக கூடியவள் அல்ல.

எனது மகள் நெல்லை, திருச்சி, மதுரை என எங்கு சென்றாலும், உடன் நானும் செல்வேன். சித்ராவை, அவளது கணவர் பத்திரமாக பார்த்து கொள்வார் என நினைத்தேன். இதனால் நானும் தைரியமாக இருந்தேன். ஆனால், இது போல் நடக்கும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் நல்லாதான் பேசி கொண்டார்கள். அவர்களுக் குள் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை.

எனது மகளின் கணவர் நல்லவரா? கெட்டவரா? என்று எனக்கு தெரியாது. இருப்பது ஒரு மகள். நல்லபடியா பார்த்துக் கொள்வார் என்று தான், நான் நினைத்தேன். ஆனால் நான் ஏமாந்து விட்டேன். அவரை கைது செய்து, விசாரிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்