கோயம்பேடு மார்க்கெட்டில் 3½ மாத குழந்தை கடத்தல் வழக்கில் கணவன்-மனைவி உள்பட 6 பேர் கைது - பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தியது அம்பலம்

கோயம்பேடு மார்க்கெட்டில் 3½ மாத குழந்தை கடத்தல் வழக்கில் கணவன்-மனைவி, மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு குடும்பமே இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.

Update: 2020-12-10 22:15 GMT
பூந்தமல்லி,

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவருடைய மனைவி சந்தியா(24). இவர்களுக்கு சஞ்சனா என்ற 3½ மாத பெண் குழந்தை உள்ளது. ரமேஷ், தனது குடும்பத்துடன் கோயம்பேடு மார்க்கெட்டு வளாகத்தில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த மாதம் 9-ந் தேதி அதிகாலை மார்க்கெட் வளாகத்தில் தூங்கியபோது, மர்மநபர்கள் ரமேசின் குழந்தை சஞ்சனாவை கடத்திச்சென்றனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடிவந்தனர்.

இதற்கிடையில் அன்று மாலையே அம்பத்தூர் அருகே சாலையோரத்தில் கிடந்த குழந்தை சஞ்சனாவை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் சாந்தி காலனியை சேர்ந்த பாபு (36), அவருடைய மனைவி காயத்ரி (33), இவர்களது 16 வயது மகன், அவருடைய 16 வயது நண்பர் மற்றும் கணேஷ் (24), செங்குட்டுவன் (35) ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவை வருமாறு:-

ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவர், சட்டப்படி தத்தெடுத்து வளர்க்க தனக்கு ஒரு குழந்தை வேண்டும். அதற்காக ரூ.10 லட்சம் தருவதாக தன்னுடன் பணியாற்றும் செங்குட்டுவனிடம் கூறினார். அவர், தனது நண்பரான கணேசிடம் கூறினார். மேலும் குழந்தை கிடைக்க ஏற்பாடு செய்தால் கமிஷன் தருவதாகவும் கூறினார்.

இதையடுத்து கணேஷ் இதுபற்றி தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவான பாபு, கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்க்கும் அவருடைய மனைவி காயத்ரி ஆகியோரிடம் கூறினார். பணத்துக்கு ஆசைப்பட்ட தம்பதிகள், தங்கள் மகன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் குழந்தையை கடத்த திட்டமிட்டு, அங்கு தங்கி உள்ளவர்களை நோட்டமிட்டனர்.

அதன்படி சம்பவத்தன்று ரமேசின் 3½ மாத குழந்தையை கடத்தினர். பின்னர் குழந்தையை செங்குட்டுவனிடம் கொடுத்தனர்.

அப்போது குழந்தையை தத்தெடுப்பதாக கூறிய பெண், குழந்தையின் பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வக்கீலையும் அழைத்து வாருங்கள். சட்டரீதியாக நான் குழந்தையை தத்தெடுத்துக்கொள்கிறேன் என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செங்குட்டுவன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தப்பட்ட குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என பரிதவித்தனர். பின்னர் குழந்தையை வாங்கிய பாபு, அன்று மாலையே அம்பத்தூர் எஸ்டேட் அருகே உள்ள சாலையோரத்தில் துணியால் குழந்தையை சுற்றி போட்டுவிட்டு, சாலையோரத்தில் குழந்தை கிடப்பதாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு குடும்பமே குழந்தையை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து குழந்தை கடத்தப்பட்ட அதே 9-ந்தேதி கடத்தியவர்களும் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்