கஞ்சா வழக்கில் கைதானவர்: சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு - மாஜிஸ்திரேட்டு விசாரணை
கஞ்சா வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் சைதாப்பேட்டை சப்- ஜெயிலில் மர்மமான முறையில் இறந்து போனார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடக்கிறது.
சென்னை,
சென்னை கோட்டை அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெயர் பிரபா(34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6-ந்தேதி அன்று, தான் ஓட்டிய ஆட்டோவில் கஞ்சா கடத்தியதாக மகாலிங்கத்தை ஐஸ்-அவுஸ் போலீசார் கைது செய்தனர்.
அவர் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். மகாலிங்கம் நேற்று முன்தினம் இரவு ஜெயில் அறையில் திடீரென மயங்கி விழுந்து, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாஜிஸ்திரேட்டு மோகனாம்பாள், சம்பவம் நடந்த சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். நேற்று மாலை மகாலிங்கத்தின் உடலுக்கு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
அங்கு சென்று மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். அப்போது பிரபா தனது குழந்தைகளுடன் சென்று போராட்டம் நடத்தினார். பிரேத பரிசோதனை நடத்திய மகாலிங்கத்தின் உடலையும் வாங்க மறுத்தார்.
பின்னர் பிரபா நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். அவர் கஞ்சா கடத்தலில் ஈடுபடவில்லை. அவரது ஆட்டோவில் ஏற்றி சென்ற பயணியை கஞ்சா கடத்தியதாக போலீசார் கைது செய்தனர். எனது கணவருக்கு கஞ்சா கடத்தலில் சம்பந்தம் இல்லை. போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் தாக்கியதால்தான், சிறையில் எனது கணவர் இறந்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எனது கணவரின் உடலை நான் வாங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு ஒன்றையும் பிரபா கொடுத்துள்ளார். மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பிறகு, மகாலிங்கம் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.
இதற்கிடையில் ஆட்டோ டிரைவர் மகாலிங்கத்தை உடனடியாக ஆஸ்பத்திரில் சேர்த்து சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடு செய்யவில்லை என்றும், அதனால் தான் மகாலிங்கம் இறந்து போனார் என்றும் புகார் கூறப்பட்டது. இதையொட்டி சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் உள்ள மற்ற கைதிகள் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஜெயிலில் உள்ள விளக்கு களை உடைத்து, சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடக்கிறது.