தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - சர்க்கரை ஆலை நிலுவை தொகை வழங்க கோரிக்கை

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-12-10 22:30 GMT
தென்காசி,

தமிழகத்தில் அறுவடை செய்யப்படும் கரும்புக்கு அரசு விலை நிர்ணயித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்புக்கான கொள்முதல் விலையை வழங்கியுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு வாசுதேவநல்லூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு பல விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு இதுவரையிலும் அதற்கான விலை வழங்கப்படவில்லை. அந்த ஆலை விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.24 கோடி வரையிலும் நிலுவைத்தொகையாக வழங்க வேண்டி உள்ளது.

இதனைத்தொடர்ந்து கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகத்தினர் மாத கடைசியில் நிலுவைத்தொகை தருவதாக பலமுறை கூறினர். ஆனால் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த முறை விவசாயிகள் தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி, சமையல் செய்து ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர், ஆலை நிர்வாகத்துடன் பேசினார். இன்னும் ஒரு மாதத்தில் நிலுவைத்தொகையை தருவதாக ஆலை நிர்வாகம் கூறியது. அவ்வாறு வழங்கப்படாவிட்டால், மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

ஆனாலும் இதுவரையிலும் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து கரும்பு விவசாயிகள் நேற்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் கரும்புகளுடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது பழனிசாமி கூறும்போது, விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கூறுகிற தேதியில் காசோலை தர வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்றார்.

மாலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆலை நிர்வாகத்திடம் இருந்து இந்த மாத இறுதிக்குள் நிலுவைத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

அப்போது இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கவில்லையெனில், தி.மு.க. சார்பில் தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று சிவபத்மநாதன் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்